20 June 2011

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்? (5)



மோகக்கூட்டுக்குள்  கட்டுண்டு கிடந்த சுந்தரிக்கும், பிரபுவுக்கும் நாட்கள் ஓடியதே தெரியவில்லை. பிரபுவின் அன்புச்சிறைக்குள் ஆனந்தமாய் அடைபட்டிருந்தாள் சுந்தரி. பிரபுவோ, சுந்தரி பின்னிய பாசவலையில் தாறுமாறாய் சிக்கியிருந்தான். இருவரும் அவற்றைவிட்டு வெளியில் வர விரும்பவே இல்லை.

ஆனாலும், பிரபுவுக்கு, சூல் கொண்டிருந்த சுந்தரியைக் காணும்போதெல்லாம் அவள் எதற்கோ ஏங்குவதுபோல் ஒரு எண்ணம் உண்டாகும். அவ்வப்போது சோர்ந்து நிற்கும் முகமே சாட்சி சொல்லியது, அவளது மனக்குறையை!

"அம்மு! உனக்கு என்னடா குறை? ஏதாவது இருந்தா சொல்லேன்!"

சுந்தரியிடம் கேட்க, அவள் சிரித்தாள்.

"குறையா? அப்படி எதுவுமே இல்லைங்கறதுதான் குறை!"

"ம்ஹும்! ஏதோ இருக்கு! நீ சும்மா சொல்லாதே! உனக்கு உங்க அப்பா, அம்மாவைப் பாக்கணும்னு தோணுதா?"

"அப்படித் தோணினா நானே உங்ககிட்ட சொல்றேன். ஆனா ஆச்சர்யம் பாருங்க, இன்னைக்கு வரைக்கும் அவங்க ஞாபகமே வரலை. உங்களால் நம்பமுடியுதா?"

"சரி,நம்பறேன். ஆனா உன் கண்ணில் தேங்கியிருக்கிற கண்ணீர் பொய் சொல்லுமா? சொல்லு! வேறென்ன வேணும்? என்கிட்ட சொல்றதுக்கென்ன? தாராளமா சொல்லு!"

"எதுவுமில்லீங்க! என் சின்ன வயசில இருந்து சாப்பாட்டுக்கே கஷ்டம்! நல்ல துணிமணி உடுத்தி நானறியேன். மண்குடிசையில வாசம்! எங்க ஜனத்துக்கு சமுதாயத்தில் நல்ல மதிப்பும் கிடையாது.

இவ்வளவு கீழான நிலையில் இருக்கிற குடும்பத்திலிருந்து, படிக்காத, நாகரிகமில்லாத ஒரு பொண்ணை ,சாதி, அந்தஸ்து எதுவுமே பாக்காம, ஊரிலே செல்வாக்கான தாய் தகப்பனை எதிர்த்துக் கல்யாணம் பண்ணிக்க ஒரு பெரிய மனசு வேணுங்க. அது உங்க கிட்ட அளவுக்கு அதிகமாவே இருக்கு!

எங்க அப்பா அம்மா பாத்து வச்சவரக் கல்யாணம் கட்டியிருந்தா, இந்நேரம் நானும் ஒரு கூலித் தொழிலாளியா பகலெல்லாம் செங்கல் சுமந்திட்டு, ராவெல்லாம் அந்த குடிகாரன் கையால் அடி வாங்கிட்டு தலையெழுத்தேன்னு காலந்தள்ளியிருந்திருப்பேன்.

இப்படி ஒரு கெளரவமான வாழ்க்கை கொடுத்த நீங்கதான் என் தெய்வம்! நான் சாகுறவரைக்கும் உங்க நிழலிலேயே வாழணும். அதுதாங்க என் ஆசை! வேறெந்த ஆசையும் இப்ப எனக்கில்லை!"

மூச்சுவிடாமல் பேசும் சுந்தரியையே வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான், பிரபு!

"அடி, எப்புடிடி  இப்படியெல்லாம் பேசக் கத்துகிட்டே?"

"என் மனசில் இருக்கறதைச் சொன்னேன்! " முடிக்கும்போது அவள் கட்டுப்பாட்டை மீறி கண்ணீர்த்துளிகள் சிந்தின.

"அடப்பைத்தியம்! எதுக்கு இப்ப அழறே? நான் எந்தக் காலமும் உன்னை விட்டுப் பிரியவே மாட்டேன். நீதான் என் உலகமே! கண்ணைத் துடைச்சுக்கோ!"

"இருந்தாலும்...எனக்கொரு சந்தேகங்க!"

"கேட்டுடு, கேட்டுடு! சந்தேகத்தை மனசுக்குள்ளேயே பூட்டி வச்சிருந்தா அது பல குட்டிகளைப் போட்டு இதயத்தை வெடிக்கவச்சிடும். .கேளு....கேளு!"

பிரபு அவசரப்படுத்தினான்.

"நான் கேக்கிற கேள்விக்கு நீங்க உண்மையை மட்டும்தான் பதிலாச் சொல்லணும், சரியா?"

"உண்மை!"

"ப்ச்! விளையாடாதீங்க! சொல்லுங்க!"

"ம்! பீடிகையெல்லாம் பலமா இருக்கு! சரி, சொல்றேன். உன்கிட்ட எனக்கு எந்த ஒளிவு மறைவும் கிடையாது, சுந்தரிம்மா! கேளு!"

"என்னை ஏன் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க?"

"இதென்னடி கேள்வி? நான் உன்னை காதலிச்சேன், கட்டிகிட்டேன்!"

"ஏன் என்னைக் காதலிச்சீங்க?"

"அம்மு! உனக்கு என்னமோ ஆயிடுச்சு! ஏன் இப்படியெல்லாம் கேக்கறே?"

"காரணம் இருக்கு! ஏன் என்னைக் காதலிக்கணும்னு உங்களுக்குத் தோணிச்சு?"

"ஏன்னா....என்ன சொல்றது? நீ உலகமகாப்பேரழகியா இருந்தே! ஊரே உன் பின்னால் சுத்துச்சு! அதனால் நானும் உன்னைச் சுத்தி சுத்தி வந்து காதலிச்சேன்!"

"மறுபடியும் விளையாடறீங்க. உண்மையில் ஒரு ஏழைப் பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கணும்னுதானே மனசுக்குள்ள நினைச்சிருந்தீங்க, அதைச் சொல்லுங்க!"

"அதான் தெரியுதில்லே? அப்புறம் என்ன கேள்வி?"

மருதாணி இட்டுச் சிவந்திருந்த அவள் விரல்களைத் தன் விரல்களுடன் பின்னிக்கொண்டான். அவள் மனதில் என்ன மாதிரியான சந்தேகம் எழுந்திருக்கக்கூடும் என்பது ஒரளவு புரிந்தது. அவள் வாயாலேயே அதை சொல்லட்டும் என்று காத்திருந்தான்.

அவளோ, ஆரம்பித்துவிட்டாளே தவிர, அதை மேற்கொண்டு தொடர்வதா, கைவிடுவதா என்ற குழப்பத்தில் இருந்தாள்.

"சுந்தரி! உனக்குத் தெரியாததில்லை! முன்னாடியே உனக்கு இதைப் பத்திச் சொல்லியிருக்கேன். இப்ப உனக்கு என்ன சந்தேகம்? அதைச் சொல்லு!"

"வந்து....அது..என்னன்னா...." அவள் மென்று முழுங்கினாள்.

"சொல்லும்மா! நான் எதுவும் நினைக்கமாட்டேன்!"

"வந்து......இந்தப்பொண்ணு நமக்கு வாழ்க்கைத் துணையா வந்தா நல்லா இருக்கும்னு என்மேல் ஆசைப்பட்டு கட்டிகிட்டீங்களா, இல்லே.....நமக்குத் தேவை  ஒரு ஏழைப்பொண்ணு! அது யாராயிருந்தா என்னான்னு நினைச்சு என்னைத் தேர்ந்தெடுத்தீங்களா? அதுதான் என் மனசில் ரொம்பநாளா உறுத்திகிட்டிருக்கிற  சந்தேகம். பதில் எதுவா இருந்தாலும் பரவாயில்ல. நான் தாங்கிக்குவேன். ஆனா தயவுசெஞ்சு உண்மையை மட்டும் சொல்லுங்க!"

பிரபு, சுந்தரியின் கைகளை இழுத்து, அவளைத் தன்னோடு அணைத்துக்கொண்டான். இரு கைகளாலும் அவள் முகத்தை ஏந்தி உச்சியில் முத்தமிட்டான். படபடக்கும் அவள் விழிகளைப் பார்த்தபடியே,

"சொல்றேன்!" என்றான்.

தொடரும்...

*********************************************************************


தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்.

மு. உரை:
ஒருவனை ஆராயாமல் தெளிவடைதலும், ஆராய்ந்து தெளிவடைந்த ஒருவனிடம் ஐயப்படுதலும் ஆகிய இவை நீங்காதத் துன்பத்தைக் கொடுக்கும்.
--------------------------------------
தொடர்ந்து வாசிக்க
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்? (6)

முந்தைய பதிவு
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்? (4)

6 comments:

  1. >>
    "நான் கேக்கிற கேள்விக்கு நீங்க உண்மையை மட்டும்தான் பதிலாச் சொல்லணும், சரியா?"

    "உண்மை!"

    ஹா ஹா பெண்களிடையே நகைச்சுவை உணர்வு கம்மி என யாரப்பா சொன்னது ?ஹா ஹா

    ReplyDelete
  2. ம்...ம்...ம்...ம்....!

    ReplyDelete
  3. ரசித்துப் பாராட்டியதற்கு நன்றி செந்தில் குமார்.

    தொடர்ந்து வருவதற்கு நன்றி ஹேமா.

    ReplyDelete
  4. முதல் பகுதி மட்டும் படிச்சு இருந்தேன்.. இப்ப மிச்ச நாலும் ஒண்ணா படிச்சேன்... ரெம்ப நல்லா இருக்குங்க... உணர்வுகளை ரெம்ப அழகா பதிவு செய்யறீங்க... தொடர்ந்து படிப்பேன் நன்றி..

    ReplyDelete
  5. உங்க வார்த்தைகள் இன்னும் உற்சாகம் தருது. ரொம்ப நன்றி தங்கமணி.

    ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.